சந்திரயான் 3: வெட்கி தலை குனிகிறோம்; இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் - பாகிஸ்தான் நடிகை!
பாகிஸ்தான் நடிகை ஒருவர் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.
தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் ஆய்வை தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு உலக நாட்டு தலைவர்களும், விண்வெளி துறை நிறுவனங்களும், மக்கள், பிரபலங்கள் என அனைவரும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் நடிகை
அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த சேஹர் ஷின்வாரி என்ற நடிகை சந்திரயான் 3 திட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விண்வெளி துறையில் பின்தங்கியுள்ள பாகிஸ்தானை விளாசியும் பேசியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான மோதலுக்கு அப்பாற்பட்டு நான் இந்த வாழ்த்தை தெரிவித்து கொள்வேன்.
உண்மையிலேயே இஸ்ரோவை வாழ்த்துகிறேன். ஏனென்றால் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்குமான இடைவெளி என்பது அனைத்து விஷயங்களிலும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானை பொறுத்தமட்டில் நிலவில் தரையிறங்க வேண்டும் என்றால் 2 முதல் 3 தசாப்தங்கள் (20 முதல் 30 ஆண்டுகள்) ஆகும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது இன்றைய பிரச்சனைகளுக்கு நாமே தான் காரணம்'' என தெரிவித்துள்ளார்.
آج ہمارے سر واقعی شرم سے جھک رہے ہیں یہ دیکھ کر کہ ہندوستان کہاں سے کہاں پہنچ گیا اور ہم مولوی تمیز الدین کی اسمبلی کو غیر قانونی طریقے سے توڑے جانے کے بعد سے آج تک ملک میں آئین و قانون کی بالادستی کی جد و جہد کر رہے ہیں۔ آج ہندوستان نے ثابت کردیا ہے کہ ان کا ہمارے درمیان جو فرق…
— Sehar Shinwari (@SeharShinwari) August 23, 2023
மேலும் அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில் 'இந்தியா இன்று எத்தகைய நிலையை அடைந்துள்ளது என்பதை எண்ணிப்பார்த்தால் நாம் வெட்கி தலைகுனிய வேண்டும். ஏனென்றால் நாம் நாட்டுக்குள்ளேயே சட்டம் மற்றும் அரசியல் சார்ந்த மேலாதிக்க பிரச்சனைகளை சரிசெய்ய பாடுபட்டு வருகிறோம். இப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான வித்தியாசம் என்பது இந்தியாவின் வெற்றியை நெருங்குவது பாகிஸ்தானுக்கு சுலபமல்ல என்பதை நிரூபித்து உள்ளது'' என தெரிவித்துள்ளார்.