இதுவரை யாராலும் செய்ய முடியாததை செய்து வரலாற்றில் இடம் பிடித்தார் முகமது ரிஸ்வான்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் டி.20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ,
இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் ஃப்கர் ஜமானுடன் கூட்டணி சேர்ந்த முகமது ரிஸ்வான், பாபர் அசாமை விட மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
ரிஸ்வான் விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த ஆசிப் அலி (0), சோயிப் மாலிக் (1) போன்ற வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும்,
கடைசி பந்து வரை தாக்குபிடித்த ஃபகர் ஜமான், ஸ்டார்க் வீசிய போட்டியின் கடைசி ஓவரில் இரண்டு இமாலய சிக்ஸர்கள் பறக்கவிட்டு 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள பாகிஸ்தான் அணி 176 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தநிலையில், இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான், இதன் மூலம் டி.20 அரங்கில் புதிய சரித்திரம் ஒன்றை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 35 ரன்களை கடந்த போது, நடப்பு ஆண்டில் தனது 1000வது ரன்னை பூர்த்தி செய்த ரிஸ்வான், இதன் மூலம் சர்வதேச டி.20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 1000+ ரன்கள் கடந்த முதன்முதல் கிரிக்கெட் வீரர் என்ற மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காராகியுள்ளார்.