பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் ஆட்சி தப்புமா? - நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவு என்னவாக இருக்கும் என உலகநாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலை இருந்து வருகிறது. இந்த பொருளாதார நிதி நெருக்கடியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் சமாளிக்க முடியவில்லை. இதனால் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தது.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படும் நிலையில் உட்கட்சியிலேயே இம்ரான் கான் மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்நாட்டில் பெரியளவில் அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
அவருக்கு எதிராக 161 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான அடுத்த அமர்வு வரும் மார்ச் 31ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் இம்ரான் கான் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது தெரிந்து விடும் என்பதால் அவர் மிகுந்த பரபரப்புடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுளது.