இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளது - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்
இந்தியாவை நோக்கி அணு ஆயுதங்கள் வைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பேசியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின், நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இதனையடுத்து, சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
சிந்து நதி நீரை நிறுத்துவது போருக்கு சமம் என பாகிஸ்தான் கருத்து தெரிவித்தது. இதனிடையே, இரு நாடுகளும் முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணு ஆயுதங்கள்
இந்நிலையில், இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "சிந்து நதி நீரை நிறுத்தி வைத்தால் இந்தியா போருக்கு தயாராக வேண்டும். நாட்டின் எந்தெந்த பகுதிகளில் நாம் அணு ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ளோம் என்று யாருக்கும் தெரியாது.
இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம். நாம் வைத்திருக்கும் ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதங்கள் பார்வைக்காக வைத்திருக்கவில்லை. 130 அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் இந்தியாவை நோக்கி உள்ளன" என கூறியுள்ளார்.