அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தும் இந்தியா - அலரும் பாக்., அமைச்சர்
அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தலாம் என பாக்., அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்ஜிகல் ஸ்டிரைக்
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அட்டாயுல்லா தரார் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், "பாகிஸ்தான் மீது அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் ராணுவ தாக்குதல் நடத்தலாம் என்று நம்பத்தகுந்த உளவுத்தகவல்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன.
உறுதியான ஆதாரங்கள் இல்லாத, வெறுமென கட்டுக்கதைகளை ஆதாரமாக கொண்டு இந்த தாக்குதலை இந்திய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. இந்தியா ஒரே நேரத்தில் மூன்று விஷயங்களை செய்கிறது. ஒன்று அதுவே விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணையில் எங்கள் நாட்டை குற்றவாளிகளாக காட்டுகிறது.
அமைச்சர் பேட்டி
இரண்டாவது, இந்த தீர்ப்பின் அடிப்படையில் தண்டனையை இந்தியாவே அறிவிக்கிறது. அதேபோல மூன்றாவதாக, அறிவிக்கப்பட்ட தண்டனையை இந்தியாவே அமல்படுத்துகிறது. நாங்கள் நியாயமான விசாரணைக்கு, நடுநிலையாளர்களை கொண்ட நிபுணர்களை விசாரணைக்கு நியமிக்க தயார் என்றும்,
அப்படியான விசாரணை குழுவை இந்தியா உருவாக்கினாலும் அதற்கு ஒத்துழைக்க தயார் என்றும் கூறியிருந்தோம். அப்படி ஏதும் நடக்கவில்லை. நாங்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். எங்கள் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறோம்.
எங்கள் மீது எந்த ஒரு தாக்குதல் நடந்தாலும், அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு முழு பொறுப்பும் இந்தியாதான் ஏற்க வேண்டும். இதனை உலக நாடுகள் உணர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.