ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆசிஃப் அலி - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் முகமது நபி (35), குல்பதின் நயிப் (35) இருவரும் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பகர் சமான் 30, கேப்டன் பாபர் அசாம் 51,ஷோயப் மாலிக் 19 எடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் ஆசிப் அலி அதிரடியாக ஆடி ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.