கடைசி நேரத்தில் பெயிண்டரை கோடீஸ்வரனாக மாற்றிய லாட்டரி - ஆச்சரியத்தில் பொதுமக்கள்
கேரளாவில் பெயிண்டர் தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு விழுந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அரசு அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. ஓணம், புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் மெகா பம்பர் பரிசுக்கான லாட்டரி சீட்டை கேரள அரசு விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையையொட்டி ரூ.12 கோடி பரிசுத்தொகை கொண்ட கேரள அரசின் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. சீட்டு ஒன்று ரூ.300 க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.முதலில் 24 லட்சம் லாட்டரி சீட்டுக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட நிலையில், அனைத்தும் விற்று தீர்ந்ததால், கூடுதல் லாட்டரிகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இதற்கு முதல் பரிசாக ரூ.12 கோடியும் (ஒரு நபருக்கு) 2வது பரிசாக ரூ.3 கோடி (6 லாட்டரிகளுக்கு) 3வது பரிசாக 60 லட்சம் (6 லாட்டரிகளுக்கு) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பம்பர் பரிசு பெறும் லாட்டரி டிக்கெட்டின் எண் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் XG 218582 என்ற எண் வரிசை கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்தது.
இந்த எண்ணுக்கான லாட்டரியை கோட்டயம் மாவட்டம் ஆய்மனம் பகுதியைச் சேர்ந்த சதானந்தம் என்பவர் வாங்கி இருந்தார். பெயிண்டிங் தொழில் செய்துவரும் சதானந்தம் காலையில் இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது லாட்டரி சீட்டையும் அவர் வாங்கிவந்துள்ளார். பிற்பகலில் குலுக்கல் முடிவில் அவர் வாங்கிய லாட்டரிக்கு பம்பர் பரிசு விழுந்துள்ளது.
இதனிடையே தனது கடன்களை அடைத்தது போக மீத தொகையை தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செலவிடப் போவதாக சதானந்தம் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.