சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற நபரை அடித்துக்கொன்ற உறவினர்கள் - தென்காசி அருகே அதிர்ச்சி சம்பவம்
தென்காசி அருகே 12 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பெயிண்டரை அடித்து கொன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் வேத கோவில் தெருவில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். 55 வயதாகும் இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இதனிடையே கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே உள்ள வீட்டில் நேற்று கோபால் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவரும், அவருடைய உறவுக்கார பெண்ணும் கோபாலை வெளியே வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றவே 2 பேரும் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து கோபால் தலையில் தூக்கி போட்டனர். பின்னர் கம்பால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால் உடலை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் உள்ள 12 வயது சிறுமி ஒருவரின் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அங்கு சென்றுள்ளார்.
சிறுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்றுள்ள அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதைக்கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் கோபாலை தாக்கியது தெரிய வந்தது. இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.