மோடியிடம் சொல் - கணவரை கொன்று விட்டு மனைவியிடம் பயங்கரவாதிகள் சொன்ன தகவல்
காஷ்மீரின் பஹால்காம் பகுதியில், நேற்று சுற்றுலா வந்திருந்த பயணிகள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பஹால்காம் தாக்குதல்
இந்த தாக்குதலில், 26 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் கர்நாடகாவின் சிவ்மொஹாவை சேர்ந்த மஞ்சுநாத் என்ற தொழிலதிபரை, அவரது மனைவி பல்லவி மற்றும் மகனின் கண்முன்னே பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
மோடியிடம் சொல்
அந்த சம்பவம் குறித்த விவரித்த அவரது மனைவி பல்லவி, "நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பெஹல்காமில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்போது 4 பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். என் கண்முன்னே என் கணவரை சுட்டுக் கொன்றனர். கெட்ட கனவுபோல் இருக்கிறது. என் கணவரை கொன்றதை போல் என்னையும் கொன்று விடுமாறு கெஞ்சினேன். என் மகனும் அதையே கூறினான்.
'உன்னை கொல்ல மாட்டோம். நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடம் சொல்' என அந்த பயங்கரவாதி கூறினான்" என தெரிவித்துள்ளார்.
தற்போது, தாக்குதல் நடந்த பஹால்காம் பகுதிக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
அரசு முறை பயணமாக சவூதி அரேபியா சென்ற பிரதமர் மோடி, பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியுள்ளார்.
பஹால்காம் தாக்குதல் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் உள்ளிட்டோருடன், பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.