கீழடி அகழாய்வில் தந்தத்தினாலான பகடை கண்டெடுப்பு
கீழடியில் நடைபெற்றுவரும் 7-ஆம் கட்ட அகழாய்வில், தந்தத்தில் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக, அகரத்தில் 8 குழிகள், மணலூரில் 3 குழிகள், கொந்தகையில் 5 குழிகள், கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில், சுடுமண் முத்திரை, உறை கிணறுகள், காதணிகள், முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் என ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தந்தத்தினாலான பகடை அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொல்லியலாளா்கள் வியாழக்கிழமை தெரிவித்தது: கீழடி உள்ளிட்ட 4 பகுதிகளில் செப்டம்பா் மாதம் வரை அகழாய்வுப் பணிகள் நடைபெறும்.
அதேநேரம், இந்த ஆய்வில் கண்டெடுக்கப்படும் தொல் பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கீழடி அகழாய்வில், தந்தத்தில் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடு கொண்ட சதுர வடிவிலான பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகடையில் ஒவ்வொரு பக்கத்தின் முகங்களும் ஒரு புள்ளியைச் சுற்றி 2 வட்டக் கீறல்கள் முத்திரையிடப்பட்டுள்ளன.
மிக நோ்த்தியாக ஒன்றன் மேல் ஒன்றாக வரையப்பட்டுள்ள இப்பகடையானது, 4 புறமும் 1.5 செ.மீ. அளவுடையதாகவும், 4 கிராம் எடையுடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பழங்கால மக்கள் பொழுதுபோக்குக்காக பகடை ஆடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கலாம் என்றனா்.