ஒட்டன்சத்திரம் அருகே தீயில் கருகி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் : வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பாச்சலூர் அரசு பள்ளியில் தீயில் கருகி இறந்த மாணவியின் வழக்கு தொடர்பாக இன்று முதல் தெற்கு மண்டல சிபிசிஐடி அதிகாரி பள்ளியில் உள்ள அனைவரிடமும் விசாரணையை தொடங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியம் பாச்சலூர் வனப்பகுதியில் பகுதியில் இயங்கிவந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 15.12.2021 அன்று,
பள்ளியின் இடைவேளையின் போது வெளியில் சென்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரித்திகா மர்மமான முறையில் பள்ளி சமையல் அறை அருகே தீயில் கருகியவாறு உயிரிழந்தார்.
இச்சம்பவத்தையடுத்து. அச்சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி குழந்தையின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு,
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுமியின் உடலை வாங்கி நல்லடக்கம் செய்தனர்.
பின்பு பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் ஒன்றினைந்து சிறுமியின் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் வாயிலாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில்,
கடந்த 23ஆம் தேதியன்று இறந்த குழந்தையின் வழக்கில் மர்மம் நீடித்து வந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.
அதன் பேரில் சிபிசிஐடி தெற்கு மண்டல அதிகாரி முத்தரசி தலைமையில் மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன், திண்டுக்கல் சிபிசிஐடி ஆய்வாளர் சந்தானலட்சுமி ஆகிய பத்துக்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார்,
அப்பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் சமையலர் மற்றும் துப்புரவு பணியாளர் உட்பட குழந்தை பிரித்திகா உறவினர்களை வரவழைத்து ஒவ்வொருவராக விசாரணையை மேற்கொண்டனர்.
மேலும், சிறுமி இறந்த இடத்தை வரைபடமாக எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சிபிசிஐடி அதிகாரிகளால் தொடங்கப்பட்ட விசாரணை இன்று இரண்டாம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.