தற்கொலை செய்து கொள்ளலாம் என யோசித்தேன் - கண் கலங்கிய பா.ரஞ்சித்
எனது அம்மா அழுததைப்போல், எனது மனைவியும் குழந்தைகளும் அழக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என ரஞ்சித் பேசியுள்ளார்.
பாட்டில் ராதா
தினகரன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள பாட்டில் ராதா படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
குடி போதையில் சிக்கியவர் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே இந்த படத்தின் கதையாகும். இந்த படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று(18.01.2025) நடைபெற்றது.
பா.ரஞ்சித்
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் தற்கொலை செய்து கொள்ளலாமா என யோசித்தேன். காரணம் எனது அம்மா அழுவதை என்னால் பார்க்க முடியாது. திருவிழா என்றால் ஊரே சந்தோசமாக இருக்கும். எனது தாய் மட்டும் அழுது கொண்டே இருப்பார்.
என் அப்பா எங்களை உணவுக்காகவோ, பணத்திற்காகவோ யாரிடமும் கொண்டு போய் நிறுத்தியது கிடையாது. எங்களை நல்லபடியாக பார்த்துக்கொண்டார். ஆனால், குடி என வரும்போது, தன்னையே இழந்து விடுவார். எனது அப்பாவை குடியில் இருந்து மீட்டுக் கொண்டு வர, எனது அம்மா, அண்ணன், தம்பிதான் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் வீட்டிலேயே இருக்க மாட்டேன்.
எனக்கு இன்னும் கொஞ்ச நாள் வாழனும் போல இருக்குடா என அப்பா என்னிடம் சொன்னார். இன்னும் 6 மாதங்கள் வரை இருப்பார் என மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், அவர் ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டார். எனது அம்மா அழுததைப்போல், எனது மனைவியும் குழந்தைகளும் அழக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன்" என கண் கலங்கிய படி பேசினார்.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.