31-வது திருமண நாளை கொண்டாடிய பி.டி. உஷா - டுவிட்டர் நெகிழ்ச்சி பதிவு - ரசிகர்கள் வாழ்த்து

By Nandhini Apr 26, 2022 05:18 AM GMT
Report

இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்று அழைக்கப்படுபவர் பி.டி. உஷா. பி.டி. உஷா தனது 14 வயதில் தேசிய அளவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார்.

ஆசியப் போட்டிகளில் 1982ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை தடகளப் போட்டிகளில் 13 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் மொத்தம் 33 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவருடைய தேசிய அளவில் பல சாதனைகளை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. மத்திய அரசு பல கவுரவ விருதுகளை பி.டி. உஷாவிற்கு வழங்கியுள்ளது. 1983ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 1983ம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்தார் பி.டி. உஷா. சீனிவாசன் மத்திய தொழில்ரக பாதுகாப்புப் படையின் ஆய்வாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பி.டி.உஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 31 வருட தோழமை, அன்பு மற்றும் ஒற்றுமையை இன்று எங்கள் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இவர்களது திருமண வாழ்க்கைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.