‘‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு உதவ வேண்டும்’’ - கை கூப்பி உதவி கேட்ட டெல்லி முதல்வர்
டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி கேட்டுக்கொள்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக தினமும் 2.5 லட்சத்திற்கு மேலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலின் வேகம் மிக அதிகமாக உள்ளது அங்கு கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டிசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சில மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ள கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவில், டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் நெருக்கடி தொடர்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு உதவ வேண்டும். சில மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான அளவில் ஆக்சிஜன் உள்ளதால் டெல்லிக்கு அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.