திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை

Corona Vaiko Oxygen Trichy Bhel
By mohanelango Apr 28, 2021 05:50 AM GMT
Report

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் மருத்துவ தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் ஆக்சிஜனுக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது பல இடங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் திருச்சியில் செயல்பட்டு வரும் பெல் ஆலையிலும் ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்தது. திமுக எம்.பி திருச்சி சிவா இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சி பெல் ஆலையில் உயிர்க்காற்று ஆக்குக! வைகோ கோரிக்கை திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான உயிர்க்காற்று (ஆக்சிஜன்) ஆக்கும் தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது.

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை | Oxygen Can Be Produced In Trichy Bhel Industry

பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கே, 8 மணி நேரத்தில், 1000 கியூபின் மீட்டர், அதாவது 150 உருளைகள் உயிர்க்காற்று ஆக்கும் திறன் கொண்டது.

ஒரு நாளைக்கு மூன்று வேலைநேரங்களில் குறைந்தது 400 உருளைகள் உயிர்க்காற்று ஆக்க முடியும். அவ்வாறு கிடைத்த ஆக்சிஜன், 2016 ஆம் ஆண்டு வரை, திருச்சி பெல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது. எனவே, தமிழக அரசு, திருச்சி பெல் ஆலையில் உயிர்க்காற்று ஆக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என்றுள்ளார்.