சென்னையில் ஆக்சிஜன் பஸ் அறிமுகம் - ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் காத்திருப்பை தவிர்க்க ஆக்சிஜன் பேருந்து அறிமுகம்.
சென்னையில் இரண்டாம் அலை பரவல் கடந்த வாரம் உச்சத்தில் இருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி ஆக்சிஜன், வென்டிலேட்டர் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் தவித்து வந்தனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸிலே நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட பிற நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த குறையைத் தீர்ப்பதற்காக சென்னை சவுகார்பேட்டை சேர்ந்த ஜெயின் இன்டர்நேஷனல் டிரேடர் அசோசியேஷன் என்ற அமைப்பினர் ஆக்சிஜன் செறியூட்டி வசதியுடன் பேருந்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஒப்படைத்தனர்.
இதன் மூலம் ஆம்புலன்ஸில் வெளியிலிருந்து வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸில் வெகுநேரம் காத்திருக்காமல் உடனடியாக ஆக்சிசன் வசதியுடன் உள்ள பேருந்தில் மாற்றம் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்படுகிறது இதனால் ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு தீரும் என நம்பப்படுகிறது.
இந்த பேருந்தில் 6 நோயாளிகளை தங்க வைக்கும் ஆக்ஸிஜன் செறியூட்டி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடீரிம் மூர்த்தி இன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.