சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையை 2 நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் அவலம்
சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு காரணமாக ஒரே படுக்கையை 2 நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும், தொற்று எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதனால், சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் படுக்கைக்காக நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வரும் நிலையில், படுக்கை இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனிடையே, சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தொடங்கி, அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால் ஒரு சில நாட்களாக நோயாளிகள் வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மாலை திடீரென 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சைககாக ஆம்புலன்ஸ்களில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக படுக்கை வழங்க முடியாததால், ஒரே படுக்கையில் 2 நோயாளிகளை அனுமதிக்கும் நிலை ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இரும்பாலையில் உள்ள சிகிச்சை மையத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.