டிடிவி தினகரன் உடன் கைகோர்த்த ஒவைசி.. தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
தமிழக சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில் அசாசுதின் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி மூன்று இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மற்றும் வட இந்திய மாநிலங்களில் செல்வாக்கு பெற்று வரும் ஏ.ஐ.எம்.ஐ.எம் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் இணைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளியானது. இது பெரும் சர்ச்சைக்குள்ளாகவே திமுக அதிலிருந்து பின்வாங்கியது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுவோம் என ஏ.ஐ.எம்.ஐ.எம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே டிடிவி தினகரன் உடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது அந்த தகவலை டிடிவி தினகரனே உறுதி செய்துள்ளார். இது பற்றி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில், திரு.அசதுத்தீன் உவைசி M.P., அவர்கள் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு.” என்றுள்ளார்.
ஒவைசியை பாஜகவின் பி டீம் என காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இந்த முடிவு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.