தேர் விபத்தில் தந்தை பலி - செல்போனில் இறுதிச் சடங்கை பார்த்து அழுத மகன்
தஞ்சாவூரில் தந்தையின் இறுதி சடங்கை அவரது மகன் செல்போனில் பார்த்தபடி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரை அடுத்த களிமேடு கிராமத்தில் நேற்று நடைபெற்ற அப்பர் குருபூஜை தேரோட்டத்தின் போது களிமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம், என்பவரும், அவருடைய மகன் அருண்குமார் என்பவரும் தேரில் வந்தனர். இதனிடையே மின்சாரம் தாக்கியதில் தேர் எரிந்ததோடு தேரில் இருந்த மற்றும் அருகில் வந்து கொண்டிருந்த 11 பேரும் பலியானார்கள்.
நாடு முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே மின்சாரம் தாக்கியதில் செல்வம் பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் அருண்குமார் காயம் அடைந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இறந்த செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அவருடைய உடல் களிமேட்டில் உள்ள அவருடைய வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
ஆனால் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்த அருண்குமாரால் தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை செல்போன் மூலம் வீடியோ காலில் காண்பித்தனர். இதனைப் பார்த்த கதறி அழுதார். அப்போது அருகில் இருந்த உறவினர்கள் அருண்குமாரை சமாதானப்படுத்தினர்.