ஆஸ்கர் விருது பட்டியலில் சூரரைப் போற்று- உற்சாகத்தில் படக்குழுவினர்
ஆஸ்கர் பட்டியலில் 3 விருதுகளுக்கான பிரிவில் 'சூரரைப் போற்று' படம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சிம்ப்ளி ஃப்ளை என்ற புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி, கடந்தாண்டு நவம்பர் 12ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆஸ்கர் போட்டியில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர்.
அதன்படி ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. பொதுப்பிரிவில் போட்டியிடுவதற்கு பல்வேறு நாடுகளிலிருந்து படங்கள் குவிந்தன. அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு, அதிலிருந்து இறுதிப்பட்டியலை ஆஸ்கர் குழுவினர் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
366 படங்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 'சூரரைப் போற்று' படமும் இடம்பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இடம்பிடித்துள்ளதால் படக்குழுவினர் பெரும் உற்சாகமாகியுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள படங்களை வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்து, இறுதிப்பட்டியலை அறிவிப்பார்கள்.
மார்ச் 5 -ம் தேதி முதல் 10 -ம் தேதி வரை வாக்கெடுப்பு நடக்கிறது. பின்னர் 15-ம் தேதி பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 25-ம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது.
ஆஸ்கர் பட்டியலில் தங்களுடைய படத்தின் பெயர் இடம்பெற்றதே, பெரிய அங்கீகாரம் என 'சூரரைப் போற்று' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.