இலங்கை அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போகும் பிரபல கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி
பொருளாதார பேரழிவை சந்தித்துள்ள இலங்கையில் மக்களுக்கு அரசு உதவ வலியுறித்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. கடந்த சில 10 ஆண்டுகளில் தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள் தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்வன் அட்டபட்டு, சனத் ஜெயசூர்யா உட்பட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இலங்கை முன்னாள் கேப்டன் அஜந்தா மேத்தியூஸ், சங்ககரா என சிலர் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கையின் கல்லே பகுதியில் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிகா பிரசாத் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளார்.
நாளை போராட்டக் களத்தில் நான் 24 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருக்கிறேன். ஈஸ்டர் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதுடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு உதவி செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்குகிறேன் என அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.