தமிழ்நாட்டில் 186 ஹெச்ஐவி பரிசோதனை மையங்களை மூட உத்தரவு?
தமிழக அரசு மருத்துவமனைகளின் ஹெச்ஐவி பரிசோதனை மையங்கள் மூடப்பட்டால் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பரவல் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்ஐவி பரிசோதனை மையங்கள் மூட உத்தரவு
இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் ஆகியவற்றில் 377 ஹெச்ஐவி பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் 186 மையங்களை மூடும்படி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், கடந்த 5-ம் தேதி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படும்.
மேலும், இந்நோய் குறித்த விழிப்புணர்வு பணிகளில் தொய்வு ஏற்படுவதுடன், தமிழகத்தில் ஹெச்ஐவி தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலை உருவாகும். தற்போது, கர்ப்பிணிகளுக்கு ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் கட்டாய எய்ட்ஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது.
மத்திய அரசு ஆர்வம்
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் ஹெச்ஐவி பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல, ஏஆர்டி கூட்டு மருந்து வழங்கும் மையங்களை தமிழக தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் தொடங்கிட மத்திய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது.
இதனால், ஏஆர்டி சிகிச்சை, மாத்திரைகள் என அனைத்தையும் பணம் கொடுத்து பெறும் நிலை ஏற்படும். இதன் தொடர்ச்சியாக உயிரிழப்புகளும் அதிகரிக்கும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை தடுத்திட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் தலைவர்களிடம் முறையிடவும், ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும், சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலியப் பிரதமருக்குப் பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை...! வெடித்த சர்ச்சை IBC Tamil
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan