குப்பைகளில் இருந்து அள்ளி வந்து விற்கப்படும் ஆரஞ்சு பழம் - உயிருக்கே ஆபத்து...உஷார்..!
சென்னை கோயம்பேடு சந்தைகளில் குப்பைகளில் கொட்டிய ஆரஞ்சு பழத்தினை அள்ளி வந்து விற்கும் பெண் பழ வியாபாரிகளால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய சந்தை
ஆசியாவின் மிகப் பெரிய சந்தை என்றழைக்கப்படுவது சென்னை கோயம்பேடு மொத்த சந்தை வளாகம் தான். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.35 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் இந்த சந்தையில் பூ, பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள், என அத்தனை பொருட்களும் மொத்தமாக சில்லறை விற்பனையிலும் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அழுகிபோன காய்கறிகள், பழங்கள், காய்கறி கழிவுகள் கோயம்பேடு சந்தை வணிக வளாகம் அருகே கொட்டப்படுகிறது.
அப்படி கொட்டப்படும் கழிவுகளை கண்காணித்து உடனே அகற்றும் வகையில் அதன் அருகிலேயே குப்பை கிடங்கு அலுவலகமும் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் உள்ளனர்.
குப்பையில் இருந்து அள்ளப்பட்டு விற்பனை
இந்த நிலையில் அங்கு கொட்டப்படும் அழுகிய ஆரஞ்சு பழங்களில் இருந்து நல்ல பழங்களை மட்டும் பொறுக்கி எடுக்கும் சில பெண் பழ வியாபாரிகள் பிளாஸ்டிக் பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் கூடைகளில் எடுத்துச் செல்கின்றனர்.
பின்னர் அந்த பழத்தை ஒரு வாளி தண்ணீரில் போட்டு கழுவும் அந்த பழ பெண் வியாபாரிகள் மீண்டும் அந்த பழத்தை விற்பனைக்காக பெட்டிகளில் போட்டு எடுத்துச் செல்கின்றனர்.
அவற்றை ஒரு கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்கின்றனர். இது போன்ற நிறைய பேர் குப்பையில் இருந்து பொறுக்கி வந்து விற்பனை செய்கின்றனர்.
உயிருக்கு ஆபத்து
இந்த பழங்களை வாங்கி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வாங்கி கொடுத்தால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறைந்த விலையில் பழம் கிடைக்கிறது என்று சுகாதாரமற்ற பழத்தையும் அதனுடன் நோயையும் வாங்கி செல்கின்றனர் மக்கள்.
இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.