ஆரஞ்சு தொப்பிக்காக அடித்துக்கொண்ட கெய்க்வாட் - கே.எல்.ராகுல் - டூபிளிசிஸ் : ஜெயித்தது இவர் தான்..!
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பிக்காக 3 வீரர்கள் போட்டிப்போட்ட நிலையில் இறுதியில் சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அதனைக் கைப்பற்றி அசத்தினார்.
இரண்டு பகுதியாக நடந்த கிரிக்கெட் உலகின் பிரம்மாண்ட தொடரான ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரின் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை இந்த தொப்பி பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வசம் இருந்தது. லீக் தொடருடன் வெளியேறிய அவர் 13 போட்டிகளில் 626 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனிடையே இறுதிப்போட்டியில் சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்ததன் மூலம் 16 போட்டிகளில் 635 ரன்களுடன் அவர் ஆரஞ்சு நிற தொப்பியைக் கைப்பற்றினார். அதேசமயம் இதேபோட்டியில் 86 ரன்கள் குவித்த சென்னை வீரர் பாப் டூபிளிசிஸ் 16 போட்டிகளில் 633 ரன்களுடன் 2 ஆம் இடம் பிடித்தார்.
ஆனால் லீக் தொடரின் முடிவில் முதலிடம் பிடித்த கே.எல்.ராகுல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.