டிசம்பர் 2 & 3-ஆம் தேதிகளில் சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்
வரும் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
மழை
இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் கூறியது வருமாறு
இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து தினங்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இரு தினங்களுக்கு கனமழை
அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்றார்.