“கனமழை பெய்யும்” - தமிழத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் சனிக்கிழமை வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை அருகே நெருங்க கூடும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 23, 24 தேதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.
மேலும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.