வெளுத்து வாங்க போகும் கனமழை - ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
தமிழகத்தில் நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், 6 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ’ஆரஞ்சு’ எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
ஆரஞ்சு எச்சரிக்கை
இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.