பிரதமரிடம் இதையெல்லாம் சொல்லுங்க - முதல்வர் ஸ்டாலினிடம் ஓ.பி.எஸ் முக்கிய கோரிக்கை

Stalin OPS Modi
By mohanelango Jun 14, 2021 10:16 AM GMT
Report

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வருகிற 17-ம் தேதி டெல்லி பயணம் செய்து பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருக்கிறார்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைட்ரோகார்பன், மீத்தேன்' போன்ற திட்டங்கள் காரணமாக பாலைவனமாக மாறிவரும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக டெல்டா மாவட்டங்கள் சோலைவனமாக ஆக்கப்படவேண்டும்.

அதை குறிக்கோளாகக் கொண்டு, அப்பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கும் பொருட்டு, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டம், புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை தடுக்கும் சட்டமாகும்.இந்த சூழ்நிலையில், காவேரி வடிநிலைப் பகுதியில் அமைந்துள்ள வடத்தெரு பகுதியில் புதிதாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது. இந்த மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். இதை அதிமுக வரவேற்கிறது.

அதே சமயத்தில், அந்தக் கடிதத்தில், எதிர்காலத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலாவது ஹைட்ரோகார்பன் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யவோ, ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டும் என்றாலோ ஆரம்பத்திலேயே தமிழக அரசுடன் ஆலோசனை நடத்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்மென்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இது தமிழக விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல். டெல்டா அல்லாத மாவட்டங்களை பொறுத்தவரையில், வம்பை விலை கொடுத்து வாங்கும் முயற்சி என்றே நான் கருதுகிறேன்.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே, இச்சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அளித்த கடிதத்தில், 'ஒரு குறிப்பிட்ட திட்டத்தை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அனுமதிப்பது என்பது தொடர்ந்து மாநில அரசின் வரம்பிற்குள்ளேயே இருக்கும்' என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சருக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால், இதனைக் குறிப்பிடுவது அவசியம் என கருதுகிறேன். இதனைக் குறிப்பிடுவது தமிழகத்திற்கு வலு சேர்க்கக்கூடிய ஒன்று என்பது எனது கருத்தாகும்.

எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும் 17ம் தேதி பிரதமரை நேரில் சந்திக்கும்போது, விவசாயிகளின் நலன் காக்கும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தில் உள்ள கூறுகள் குறித்தும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரின் கடிதம் குறித்தும், சட்டப்படி தமிழக அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, புதிதாக புதுக்கோட்டை மாவட்டம், வடத்தெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.