விரைவில் அதிமுகவில் இணைக்கிறாரா சசிகலா? - ஓபிஎஸ் சொன்ன கதையால் பரபரப்பு
கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கூறியதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறிய குட்டிக்கதை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், நான் நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே, நான் வந்திருக்கிறேன். நல்லவர்கள் என்றுமே நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு. அது ஏற்புடையதும் கூட என்று இயேசு கூறினார் என கதை ஒன்றை தெரிவித்தார்.
ஓபிஎஸ்-ஸின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன்மூலம் சசிகலாவை ஏற்க வேண்டும்; அதுதான் நல்ல தலைமைக்கு அழகு என்பதை அவர் மறைமுகமாக கூற வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.