ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ADMK AIADMK O. Panneerselvam Madras High Court
By Thahir Jul 06, 2023 09:55 AM GMT
Report

ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் 2019இல் தேனி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

OPS son O.P. Ravindranath

இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். எனவே தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு மிலானி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர், தேர்தல் அதிகாரிகள், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது

இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், ஓ.பி.ரவீந்திரநாத் 2019 தேனி தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்ப்பட்டுள்ளது.

இருந்தும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பு கோரிக்கையினை ஏற்று தீர்ப்பை ஒரு மாதத்திற்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.

ஒரு மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்து தீர்ப்பில் மாற்றமில்லை என்றால் அவரது எம்பி பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.