குறைந்த வருமானம்..ஆனால் தொழில் வரி அதிகம்!! ஓபிஎஸ் கண்டனம்
தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், விளையாட்டுப் போட்டி மற்றும் பயிற்சிக் கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் அறிக்கை
அவ்வறிக்கை வருமாறு,
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்களிடமிருந்து எந்தெந்த வழியில் வரி வசூலிக்கலாம் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறதேயொழிய, பொதுமக்களின் நிதிச் சுமையை குறைப்பது பற்றி துளிகூட சிந்திப்பதில்லை. பொதுமக்களுக்கு நிம்மதியை உருவாக்கித் தரவேண்டிய ஓர் அரசு வழிப்பறிக் கொள்ளையர்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வகையில், தற்போது சென்னை மாநகராட்சியில் தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், விளையாட்டு பயிற்சி கட்டணம் ஆகியவற்றை உயர்த்த சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொழில் வரி என்பது தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஏழையெளியோர் செலுத்தக்கூடிய வரி. இந்த வரி, ஆறு பாதங்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் பெறுவோர்களுக்கு 45 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. அதாவது, குறைந்த வருமானம் பெறுவோருக்கு மட்டும் தொழில் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால், கடைநிலை ஊழியர்கள் உட்பட கீழ்நிலையில் பணியாற்றுவோர் மட்டும் பாதிக்கப்படுவார்கள்.
அடுத்தபடியாக, தொழில் உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மாநகராட்சியிடம் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக பதிவுக் கட்டணம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் மாநகராட்சியால் வசூலிக்கப்படுகிறது. தற்போது வரை வணிகத்திற்காக வசூலிக்கப்பட்டு வந்த தொழில் உரிமக் கட்டணம் 500 ரூபாயிலிருந்து மிகச் சிறிய வணிகத்திற்கு 3,500 ரூபாயாகவும், சிறிய வணிகத்திற்கு 7,000 ரூபாயாகவும், பெரிய வணிகங்களுக்கு 15,000 முதல் 50,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது வணிகர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.
துன்பத்தைத் தரும்
இதேபோன்று விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளும் கட்டணமும் 50 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் விளையாட்டு அரங்கங்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதன் காரணமாக சென்னை மாநகராட்சி விளையாட்டு அரங்கங்களில் பொதுமக்கள், குறிப்பாக ஏழையெளிய மற்றும் நடுத்தர வகுப்பினைச் சேர்ந்த இளைஞர்கள் பயிற்சியினை மேற்கொள்வார்கள். இதுபோன்ற செயல் விளையாட்டின் மீது இளைஞர்களுக்கு உள்ள ஆர்வத்தினை குறைக்கும் செயலாகும்.
மொத்தத்தில் அனைத்துக் கட்டண உயர்வுகளும் ஏழையெளிய நடுத்தர மக்களை பாதிக்கும் செயலாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே தி.மு.க. அரசின் வரி உயர்வுக் கொள்கைக் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியால் தற்போது உயர்த்தப்பட்டுள்ள தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், விளையாட்டுப் போட்டி மற்றும் பயிற்சிக் கட்டணம் ஆகியவை அவர்களுக்கு மேலும் துன்பத்தைத் தரும்.
எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் மற்றும் விளையாட்டுப் போட்டி மற்றும் பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய முன்வரவேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.