அதை மட்டும் சொல்லுங்கள் நான் அரசியலில் இருந்தே விலகி கொள்கிறேன் - ஓபிஎஸ் உருக்கம்
நான் அரசியலில் இருந்தே விலகி கொள்கிறேன் என ஓபிஎஸ் உருக்கமாக பேசியுள்ளார்.
மோடி கேட்டுக்கொண்டதால் துணை முதல்வர்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தேனியில் உள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செய்த ஓ.பன்னீர்செல்வம், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதில் பேசிய அவர், ""எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினார்கள். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 1991ல் ஒன்றிணைத்தவர் ஜெயலலிதா. கட்சிக்கு சோதனை வந்தபோது ஜெயலலிதா என்னிடம் முதல்வர் பதவியை கொடுத்தார். 2 முறை அவரின் கட்டளையை ஏற்று நான் முதல்வரானேன்.
ஜெயலலிதா மறைந்தபிறகு மறைந்தபிறகு எனக்கு முதல்வராவதில் விருப்பம் இல்லை என்று கூறினேன். ஆனால் என்னை காட்டாயப்படுத்தி முதல்வராக்கினார்கள். நான் கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை.
மோடி கூறியதால் தான், நான் அப்போது துணை முதல்வர் பதவியினை ஏற்றுக்கொண்டேன். அரசியல் பிரபலம் ஒருவர் கூறியதாலே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன்.
தனிக்கட்சி தொடங்க மாட்டேன்
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே தனிக்கட்சி தொடங்குமாறு பண்ருட்டி ராமச்சந்திரன் என்னிடம் கூறினார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இப்போது மட்டுமல்ல எப்போதும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அதிமுகவின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவே ‘உரிமை மீட்புக் கழகம்’ தொடங்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவில் என்னை இணைத்து இரட்டை தலைமை கொண்டு வந்தார். என்னை தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்க கூறி வற்புறுத்தியதும், நானும் இணைந்து கையெழுத்து போட்டால் தான் அது செல்லுபடியாகும் என்று விதிகளைக் கொண்டு வந்ததும் அவர் தான்.
நானும் பதவியில் இருக்கும் வரை, அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தேன்.
அரசியலில் இருந்து விலகுகிறேன்
என்னென அவமரியாதை செய்தார்களே அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான். இயக்கத்திற்காக பணியாற்றினேன். ஆனால் கட்சியின் சட்டவிதிகளை திருத்தினார்கள். எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட விதிகளை மாற்றுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது.
அது தொடர்பான சட்டப்போராட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கட்சி வேஷ்டி கட்டக்கூடாது. கொடி கட்டக்கூடாது என்று நீதிமன்றத்திற்கு செல்கிறீர்கள்.
நான் முதல்வராக இருந்துள்ளேன், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளேன். நான் என்ன தவறு செய்தேன், கட்சியில் இருந்து ஏன் என்னை நீக்கினார்கள் என்றுதான் கேட்கிறேன். அதை மட்டும் சொல்லுங்க. நான் அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.