ஜெயலலிதா மரண விவகாரம் : விஜயபாஸ்கரை கோத்துவிடும் ஓபிஎஸ்
ஜெயலலிதா இறப்பதற்குமுன் நான் நேரில் பார்த்தேன் என்று இரண்டாவது நாள் விசாரணையின்போது ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையினை முடுக்கியுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ஆறுமுகசாமி ஆணையம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில் அப்போது, 2016 டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறப்பதற்குமுன் நான் உட்பட 3 அமைச்சர்கள் அவரை நேரில் பார்த்தேன் என்று ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலழிந்த பின் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது என்றும் ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் தெரிவித்தார் எனவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
மேலும், 2016 டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவை சந்திக்காமல், அப்போலோ குழுமம் தலைவர் பிரதாப் ரெட்டியை, அப்போதைய ஆளுநர் சந்தித்தது பற்றி தனக்கு நினைவில்லை என்றும் ஆணையத்தில் திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என பதில் கூறி வந்த ஓபிஎஸ், ஜெயலலிதாவை வெளிநாட்டு அழைத்துச் செல்லத் தடையாக இருந்தது யார் என்ற கேள்விக்கு மட்டும், அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எஸ். பி வேலுமணி ஆகியோரிடம் வெளிநாடு அழைத்து செல் லாம் என தான் கூறியதாக தெரிவித்திருப்பது அடுத்தடுத்த விசாரணையில் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி போன்றோரையும் ஆணையம் விசாரணைக்கு அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.