‘மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும்’ - ஓபிஎஸ் வலியுறுத்தல்
மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.
கி.மு.460-ம் ஆண்டு முதல் கி.மு.370-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஹிப்போகிரேட் மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எனவே மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட் பெயரில் உறுதிமொழி ஏற்பது மருத்துவம் படிப்போரின் வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரியில் 68-வது குழுவாக இணைந்த 250 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் ஏற்ற உறுதிமொழியில் சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஹிப்போகிரேட் பெயரில் உறுதிமொழி எடுப்பதற்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி எடுக்கப்பட்டதற்குக் கடும் கண்டனம் எழுந்த நிலையில், கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தவறிழைக்காத மருத்துவ கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல். கல்லூரி முதல்வர் தெரிந்தே எந்த தவறும் செய்யவில்லை.
மருத்துவர் ஏ.ரத்தினவேல் அவர்களை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க திமுக அரசை வலியுறுத்தல் pic.twitter.com/XstaK9NxfQ
— O Panneerselvam (@OfficeOfOPS) May 3, 2022
மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதி மொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயலாக இருந்தாலும், அரசின் சார்பில் தெளிவான அறிவுரையை முன்கூட்டியே வழங்காததே சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு முக்கிய காரணம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
எனவே, உடனடியாக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீண்டும் கல்லூரி முதல்வராக ஏ.ரத்தினவேலை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.