ஓ.பி.எஸ். இ.பி.எஸ் மீது வழக்கு பதிவு- காரணம் என்ன?
ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., உள்ளிட்ட 250 பேர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் இன்று நடைபெற்றது.
தற்போது கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆகவே,அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா நேற்று மனு அளித்தார்.
போலீசார் தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டது . இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட சிறப்பு போலீஸ் படை குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்த நடந்த கூட்டத்தில், நீண்ட விவாதங்களுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., உள்ளிட்ட 250 பேர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் கூட்டமாக கூடியதால், அதிமுக நிர்வாகி மகாலிங்கம் உள்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது .
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஊரடங்கு தடையை மீறி அதிமுக தலைமையகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது.