ஓபிஎஸ் பரதன், ராமர் கூட இருக்க வேண்டியவர்: டிடிவி தினகரன்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரதன், ராமர் கூட இருக்க வேண்டியவர், ராவணனுடன் சேர்ந்துவிட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி சசிகலா ஓய்வில் இருப்பதாகவும் பிப் 24ஆம் தேதி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலுள்ள அம்மா திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்துவார் எனவும்.
அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அமமுக - பாஜக கூட்டணி தொடர்பாக இதுவரை யாரும் பேசவில்லை என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தார். மேலும் சுதாகரனுக்கு அபராத தொகை செலுத்த பணம் இல்லை எனவும் அதனால்தான் காத்துக்கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.
ஓபிஎஸ் பரதனாக இருந்தது உண்மைதான், அந்த பரதன் தவறான முடிவெடுத்து இன்று மோசமான நிலையில் உள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராவணனுடன் சேர்ந்ததால், இன்றைக்கு இதுபோன்ற நிலைமையில் இருக்கிறார். பரதன், ராமர் கூட இருக்க வேண்டியவர், ராவணனுடன் சேர்ந்துவிட்டார் என்று தான் நான் சொன்னேன் என கூறியுள்ளார்.
ஓபிஎஸ் நிச்சயம் மன உளைச்சலில் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். சசிகலா அணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தால் நிச்சயம் வரவேற்பேன்.
அவர் மீண்டும் பரதன் ஆகிவிட்டார் என்று நினைத்துக் கொள்வேன் என செய்தியாளர் கேள்விக்கு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.