அமித் ஷா அப்போவே சொன்னார்; இபிஎஸ் கேட்கவே இல்லை - உண்மை உடைத்த ஓபிஎஸ்!
அதிமுக தோல்வி குறித்து பன்னீர்செல்வம் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தோல்வி
தேனியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய இவர், "2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக நான், எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினோம்.
ஒற்றுமையாக இருக்குமாறு அமித் ஷா கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் தான் இன்று அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என நானும் அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம்.
பன்னீர்செல்வம் ஆதங்கம்
இதற்கு விருப்பமில்லை என்றால் பாஜகவுக்கு 20 தொகுதிகள் கூடுதலாகக் கொடுங்கள், அதை பாஜக அமமுகவுக்குக் கொடுக்கும் என்று அமித் ஷா கூறினார். அதற்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. தொகுதிகளைக் குறைத்துக் கேட்டபோதும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால், அமித் ஷா இன்னொரு யோசனையும் சொன்னார். நான் சொன்னால் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்வார். ஆனால், தினகரனின் அமமுகவுக்கு 10 வாரிய தலைவர் பதவிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அமித் ஷா கூறினார். எடப்பாடி பழனிசாமி அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால், அமித் ஷா வேகமாக அந்த இடத்தைவிட்டு எழுந்து கிளம்பிவிட்டார். அமித் ஷா சொன்னதைக் கேட்டிருந்தால் அதிமுகதான் இன்று ஆளுங்கட்சியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.