ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்து கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்துள்ளார் - ஈபிஎஸ் விமர்சனம்
ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தபோது பல்வேறு சூழ்நிலைகளில் பொறுப்புகளையும், பதவிகளையும் பெற்று அனுபவித்துவிட்டு, தற்போது பதவி வெறி பிடித்து ஜெயலலிதா, எம்ஜிஆர் தொண்டர்களுக்காக கொடுத்த கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
ஈபிஎஸ் சாமி தரிசனம்
பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அதிமுக தொண்டர்கள் பழனி பேருந்து நிலையம் முன்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் மற்றும் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஈபிஎஸ் விமர்சனம்
அப்போது பேசிய, எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் இருந்தபோது பல்வேறு சூழ்நிலைகளில் பொறுப்புகளையும், பதவிகளையும் பெற்று அனுபவித்த ஓ.பன்னீர் செல்வம் பதவி வெறி பிடித்து எம்ஜிஆர் வழங்கிய அதிமுக கட்சி அலுவலகத்தை குண்டர்கள் வைத்து தாக்கியுள்ளார்.

மேலும் அதிமுக கட்சி அலுவலகம் தனிநபர் சொத்து அல்ல, இது தொண்டர்களின் சொத்து இதை யாரும் உரிமை கொண்டாட முடியாது.
எம்ஜிஆர், ஜெயலலிதா இரு தலைவர்கள் அமர்ந்த கட்சி அலுவலகத்தை குண்டர்களை வைத்து அடித்து உடைத்துள்ளனர்.
அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கக்கூடிய கட்சி அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தது, ஒன்றரை கோடி தொண்டர்களை நெஞ்சில் காலால் உதைத்ததை போன்ற செயல் எனக் கூறியுள்ளார்.