பன்னீர்செல்வமா? பழனிசாமியா?- அதிமுகவில் தொடரும் போஸ்டர் யுத்தம்..
நெல்லை மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போஸ்டர் மூலம் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வருகின்றனர். இவர்களுடைய ஆதரவாளர்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான நெல்லை சந்திப்பு, டவுண், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் நேற்று ஒட்டப்பட்டிருந்தது.

அதில், மானூர் ஒன்றிய அ,இ.அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ நடவடிக்கைகளோ செய்யாதே! அவ்வாறு செய்ததால்தான் தேர்தலில் தோற்றுப்போனோம், இனிமேலும் தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகை இடுவோம் என வாசகம் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில், தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என அச்சிடப்பட்டுள்ளது. அதேசமயம் இது மாற்றுக் கட்சிகளின் சதிவேலை என நெல்லை அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.