ஞானதேசிகன் மறைவு மிகப் பெரிய இழப்பு- முதல்வர் பழனிசாமி இரங்கல்
தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சிதலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தி:
மூத்த அரசியல்வாதியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன், மறைவு மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்குவதாகவும் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர்.
கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாகப் பழகக்கூடிய பண்பாளர். "நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் ஞானதேசிகன். ஞானதேசிகன் மறைவு அவர் தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தொண்டர்களுக்கும் பேரிழப்பு.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸின் துணை தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் துயர செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்வதோடு குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 15, 2021