நீட் தேர்வை ரத்து செய்ய குழு: ஓபிஎஸ் கடும் விமர்சனம்

O panneerselvam Neet crew
By Petchi Avudaiappan Jun 16, 2021 04:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 நீட் தேர்வை ரத்து செய்வதற்கு குழு அமைத்திருப்பது கால தாமதத்தை ஏற்படுத்தும் செயல் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வுக்கு ஆரம்பக்கட்டத்தில் இருந்தே திமுக கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும் என்றும் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக தலைமையிலான தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினால் அமைக்கப்பட்ட அக்குழு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு குழு எதற்கு? என்பதை ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு’ என்னும் பழமொழியை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயக் குழு அமைத்திருப்பது கால தாமதப்படுத்தும் செயல் என்றும் சட்டமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு ரத்து குறித்து சட்டம் இயற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரை தமிழக முதல்வர் நேரில் சந்திக்கும் போது நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.