ஓ.பி.எஸ் போடும் பரதன் வேஷம்: ஸ்டாலின் கடும் விமர்சனம்
சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக, அதிமுக மும்முரமாக அதற்கு தயாராகி வருகின்றன. ’வெற்றிநடை போடும் தமிழகம்’ என அதிமுகவும் ’விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என திமுகவும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. முதல்வர் ஈ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மட்டுமல்லாது அனைத்து அமைச்சர்களுக்கு எதிராகவும் திமுக தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திமுக தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். இன்னும் 3 மாதங்கள் காத்திருங்கள்; திமுக ஆட்சி மலரும். துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.
தேனி வட்டார மக்களின் ஏராளமான கோரிக்கைகளை பன்னீர்செல்வம் தீர்க்காமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து வருகிறார். அவருக்கு 2 முறை முதல்வர் பதவி கொடுத்த ஜெயலலிதாவிற்கும் உண்மையாக இல்லை. 3வது முறையாக முதல்வர் பதவி கொடுத்த சசிகலாவிற்கும் உண்மையாக இல்லை. தற்போது முதல்வராக உள்ள பழனிசாமிக்கும் உண்மையாக இல்லை. அயோத்திக்கு கிடைத்த பரதனை போல தமிழகத்திற்கு கிடைத்த ஓபிஎஸ் என ஊரை ஏமாற்றுவதற்காக விளம்பரம் செய்கிறார்.
பரதன், அயோத்தி என சொன்னால் பா.ஜ.,வுக்கு புரியும் என்பதற்காக இப்படி விளம்பரம் செய்கிறார். இதனை பக்தர்களே ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா மரணத்தின் போது பன்னீர்செல்வம், பழனிசாமி, சசிகலா, தினகரன் ஒன்றாக தானே இருந்தார்கள். அவரின் மர்ம மரணத்தில் என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரியாதா? இப்போது பிரிந்து வந்துவிட்டதால் பாவத்தில் பங்கு இல்லை என்று ஆகிவிடுமா? இதுவரை எதுவும் செய்யாத பன்னீர்செல்வம், இனியும் தேர்தலில் வெற்றிப்பெற்று என்ன செய்யப்போகிறார்? அதற்கு வீட்டிலேயே சும்மா இருக்கட்டும் என மக்கள் பாடம் கற்பிக்கும் தேர்தலாக இது இருக்கும்.
2001ல் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு ரூ.17 லட்சத்து 44 ஆயிரமாக இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடியே 77 லட்சமாக உயர்ந்தது என குற்றம்சாட்டு வழக்கு தொடரப்பட்டது. இப்போது பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனை விசாரிக்க திமுக வழக்கு போட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுக.,வின் கைப்பாவையாக உள்ளது. இதனால் திமுக ஆட்சிக்கு வந்தப்பின் பன்னீர்செல்வத்தின் சொத்துக்குவிப்பு குறித்து உறுதியாக விசாரிக்கப்படும்.
இந்த ஊழல் முகத்தை மறைக்கவே பரதன் வேஷம் போட்டுள்ளார். இனி எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும். திமுக.,வினரின் வெற்றி மக்களின் வெற்றியாக அமையும். மார்ச் 14ல் திமுக.,வின் 11வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும்” இவ்வாறு அவர் பேசினார்.