பிரதமர் மோடிக்கு 9 கோரிக்கைகள் - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக கடிதம்

Stalin Modi Sonia Gandhi
By mohanelango May 13, 2021 10:11 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தினசரி பாதிப்புகளும் மரணங்களும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.

இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்து பாதிப்புகளை குறைக்க தடுப்பூசி செலுத்துவது ஒன்றே தீர்வாக உள்ளது.

ஆனால் இந்திய அரசின் தடுப்பூசி செயல்படுத்தும் திட்டம் மிகப்பெரிய குளறுபடிகளுக்குள் சிக்கித் தவிக்கிறது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநிலங்கள் தாமாக முன்வந்து கொள்முதல் செய்வதாக அறிவித்துவிட்டன.

இந்த நிலையில் சோனியா காந்தி, ஸ்டாலின். மமதா பானர்ஜி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் 9 பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அவை

- உள்ளூரிலுல் உலகளவிலும் மத்திய அரசின் வசம் உள்ள நிதி ஆதாரத்தை பயன்படுத்தி தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும்.

- நாடு தழுவிய அளவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

- Compulsory licensing அதிகாரத்தை பயன்படுத்தி உள்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பை விரிவுபடுத்த வேண்டும்.

- தடுப்பூசி செலுத்துவதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.35,000 கோடியை முழுமையாக செலவிட வேண்டும்.

- புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை நிறுத்தி அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஆக்சிஜன், தடுப்பூசிகளை வாங்குவதற்காக செலவிட வேண்டும்.

- பி.எம்.கேர்ஸ் நிதியில் நன்கொடையாக பெறப்பட்ட அனைத்து நிதியையும் முழுமையாக கொரோனா பணிகளுக்காக செலவிட வேண்டும்.

- வேலை இழந்தவர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.6000 வழங்க வேண்டும்.

- இந்திய அரசு குடோன்களில் ஒரு கோடி டன்னுக்கும் அதிகமான உணவு பொருட்கள் கிடக்கின்றன. அதனை தேவைப்படுவோருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

- வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

இந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளனர்.