சூரசம்ஹாரத்தின் போது முதல்வருக்கு அரோகரா - எதிர்க்கட்சிகள் கண்டனம்

Vijay DMK BJP Murugan
By Karthikraja Nov 16, 2026 12:39 PM GMT
Report

opposition parties condemns arohara for cm vijay: திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் முதல்வருக்கு அரோகரா என அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வர்ணனையாளர் கோஷமிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சூரசம்ஹாரத்தின் போது முதல்வருக்கு அரோகரா

நேற்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சூரசம்ஹாரத்தின் போது முதல்வருக்கு அரோகரா - எதிர்க்கட்சிகள் கண்டனம் | Opposition Parties Condemns Arohara For Cm Vijay

திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், வெற்றிவேல் வீரவேல், முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டனர்.

இதனிடையே சூரசம்ஹார நிகழ்வுக்காக அரசு ஏற்பாடு செய்திருந்த பாடல் குழுவினர், முருகனுக்கு அரோகரா.. என கூறியதோடு தமிழக முதல்வருக்கு அரோகரா.. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.

திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வில் இதுவரை முதல்வருக்கு, அமைச்சருக்கு அரோகரா என யாரும் கூறியதில்லை திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த செயலுக்கு சமூகவலைதளங்களிலும் முருக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாஜக கண்டனம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "எம்பெருமான் முருகன், சூரபத்மன் எனும் அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு, நேற்றைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற ‘சூரசம்ஹாரம்’ நிகழ்வின் போது, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற வரிசையில் ‘முதலமைச்சருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு அரோகரா’ என்று கோஷமிட்ட பாடகர் திரு. வேல்முருகனுக்கு எனது கடும் கண்டனங்கள்! 

சூரசம்ஹாரத்தின் போது முதல்வருக்கு அரோகரா - எதிர்க்கட்சிகள் கண்டனம் | Opposition Parties Condemns Arohara For Cm Vijay

கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கமிடும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கடந்த ஆறு நாட்களாகக் கடும் விரதமிருந்து, நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, சிந்தையிலும் நெஞ்சிலும் எம்பெருமான் முருகனைச் சுமந்து நிற்கும் பக்தர்கள், திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழைக் கேட்பதற்காகவா ஆண்டவனின் சந்நிதியில் கூடுகிறார்கள்? ஒருவேளை, அரசியல் அதிகாரமும் திரையுலகப் புகழும் இருப்பதால், பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளைவிட, திரு. ஜோசப் விஜய் எனும் சினிமா பிரபலம் உயர்ந்தவர் என்று இந்த மூடர் கூட்டம் கருதுகிறதா? 

எவ்வித ஆன்மீகப் புரிதலோ அல்லது பற்றுதலோ இல்லாத ஒரு சினிமா பிரபலத்தை, இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்தால், அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளையும், ஆலயத்தின் ஆன்மீகப் புனிதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட திரு. வேல்முருகன் அவர்கள், உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

திமுக கண்டனம்

திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்வை முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகாரா கோஷம் போடப் பயன்படுத்தியது இதுவரை தமிழ்நாடு கண்டிராத மலிவான அரசியல்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கவேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும் ஆணையர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

ஆகமவிதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது, கடவுளுக்கு நிகராக மனிதனை வைப்பது தவறு என முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிடிவி தினகரன் கண்டனம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப்பெருமானுடன் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் திரு. குப்புசாமி மற்றும் அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும் பாடகருமான திரு. வேல்முருகன் ஆகியோரின் செயல் பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சூரசம்ஹாரத்தின் போது முதல்வருக்கு அரோகரா - எதிர்க்கட்சிகள் கண்டனம் | Opposition Parties Condemns Arohara For Cm Vijay

முருகப்பெருமானின் வீரத்தையும் அருளையும் போற்றிப் பாட வேண்டிய புனிதமான இடத்தில், தங்களுக்குப் பதவி வழங்கிய ஆட்சியாளர்களிடம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக, கடவுளுக்கு இணையாகத் தமிழக முதலமைச்சரையும் அமைச்சரையும் ஒப்பிட்டுத் துதி பாடுவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? பதவி தந்த ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக முருகப்பெருமானின் புனிதத்தையும், லட்சக்கணக்கான பக்தர்களின் இறைநம்பிக்கையையும் பலிகொடுப்பதா? 

சாதி, மதம், அரசியல் கட்சி, ஆட்சி அதிகாரம் ஆகிய அனைத்தையும் கடந்து நடைபெறும் புனிதமான நிகழ்வைத் தனிநபர் புகழ்ச்சிக்கும் அரசியல் ஆதாயத்திற்கும் பயன்படுத்தியிருப்பது, தாங்கள் படும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடுமையாக விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட வந்திருந்த பக்தர்களின் நம்பிக்கையை ஏளனப்படுத்தி, அவர்களை அவமதிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

எனவே, திருக்கோயில்களின் ஆன்மிகப் புனிதத்தையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்கத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும், சம்பந்தப்பட்ட வர்ணனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்ற புனிதமான நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த தனிநபர் புகழ்ச்சிகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.