'கேப்டன் பதவி கிடைத்தால் கவுரவமாக கருதுவேன் - பும்ரா

opportunity honour bumra capitan
By Irumporai Jan 18, 2022 06:17 AM GMT
Report

வருங்காலத்தில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதைக் கெளரவமாகக் கருதுவேன் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா அளித்த பேட்டியில் கூறுகையில், ''டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு குறித்து விராட் கோலி அணியின் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவரது இந்த தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம். அணியின் கேப்டனாக அவர் அளித்த பங்களிப்புக்காக நாங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். அவரது முடிவு சரியா தவறா என்று நான் கருத்து கூற முடியாது. விராட்கோலி தலைமையின் கீழ் விளையாடுகையில் மகிழ்ச்சிகரமாக இருந்தது.

அவர் அணியில் ஒரு முக்கிய நபராக எப்போதும் இருப்பார். அவர் அணிக்கு நிறைய பங்களித்துள்ளார். இன்னும் நிறைய பங்களிப்பை அளிப்பார். வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதனை நான் மிகப்பெரிய கவுரவமாக கருதுவேன்.

எந்தவொரு வீரரும் இந்திய அணியின் கேப்டன் பதவியை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். அதில் நானும் மாறுபட்டவன் கிடையாது'' என்று தெரிவித்தார்.