உதயநிதி திறந்துவைத்தும் பயன்பாட்டிற்கு வராத கொரோனா சிகிச்சை மையம்... பொதுமக்கள் அவதி...
கோவை அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையம் திறப்பு விழா நடத்தப்பட்டும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோவையில் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையையே நாடுகின்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்தும் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமலும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமலும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனை போக்க கடந்த 23 ஆம் தேதி கோவை அரசு கலைக் கல்லூரியில் தனியார் அமைப்பு சார்பில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, அதனை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆனால் 3 நாள்களாகியும் கொரோனா சிகிச்சை மையம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார் எழுந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகம் ஆக்சிஜன் நிரப்பும் பணிகள் நிறைவடையாததால் திறக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.