முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கை
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து வருகிறது.
தமிழக அரசு சமீபத்தில் பத்திரிகையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்திருந்தது. தற்போது போக்குவரத்து ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள், போக்குவரத்து ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவி வரும் பெருந்தொற்று காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களின் பணி போற்றுதலுக்குரியது.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 27, 2021
போக்குவரத்து ஊழியர்களுக்கு வரும் 31-ம் தேதியுடன் காலாவதியாக இருக்கும் மருத்துவக் காப்பீட்டினை மேலும் ஓராண்டிக்கு நீட்டிக்க வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும்.
பணி ஓய்வு மற்றும் விருப்ப பணி ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஓய்வு கால பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஏற்கனவே மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.