ஊட்டியில் உறையும் பனிக்காலம் : மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கி இருக்கிறது. வருடம் தோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இருந்தாலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக பனிப்பொழிவு தாமதமாகவே தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக உதகை மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், புல்வெளிகளில் பனிப்பொழிவு என்பது அதிகம் காணப்பட்டு அதன் தாக்கம் கண்கூடாகவே தெரிகிறது.
அதிக பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் அதிகாலை பணிக்கு செல்லும் காய்கறி, விவசாயம், தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் என பலர் பனிப்பொழிவில் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள், மலை காய்கறி ,செடிகள், மலர் செடிகள் மற்றும் மரங்கள் என அனைத்துமே கருகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதால் தாவரவியல் பூங்கா படகு இல்லம் உட்பட பல பகுதிகளில் பனிப்பொழிவால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடுமையான பனியின் காரணமாக எதிர்ப்புறம் வரும் வாகனங்கள், ஆட்கள் என யாரும் தெரியாத நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.