ஊட்டி மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு

By Petchi Avudaiappan May 19, 2022 10:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் நாளை முதல் இயக்கப்படவுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்தவாறு மகிழ்ச்சியுடன் பயணம் செய்வது வழக்கம்.

இந்த மலை ரயில் தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து  புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதேபோல் மதியம் 2 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது. ஆனால் ஊட்டியில் கோடை சீசன் தொடங்கி நடைபெற்று வருவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும் மலை ரெயிலில்  பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மே 21 ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு ஜூலை மாதம் 16 ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் 9 முறை மலை ரயில் இயக்கப்படுகிறது.

அதேசமயம் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வருகிற 27 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 22 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் 9 முறை ரயில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது. 

இந்த ரயிலில் பயணம் செய்ய கட்டணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூ.1,210, இரண்டாம் வகுப்பு ரூ.815, ஊட்டிக்கு முதல் வகுப்பு ரூ.1,575, இரண்டாம் வகுப்பு ரூ.1,065 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.