கொடநாடு கொலை வழக்கு: முதல்வர் பழனிசாமி, சசிகலா மீது விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி
உதகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உள்ளிட்ட 9 பேரை விசாரிக்க தாக்கல் செய்யபட்ட மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிபதி சஞ்ஜீவ் பாபா உத்தரவு.
கடந்த 2017-ம் ஆண்டு கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடை பெற்று வருகிறது.
இதில் அரசு தரப்பு சாட்சிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது எதிர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முனிரத்னம் இந்த வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன், மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உள்ளிட்ட 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி சஞ்ஜீவ் பாபா காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தினார்.
அப்போது விசாரிக்க கோரிய வழக்கிற்கும், மனுவிற்கும் சம்பந்தம் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஆனால் சயான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, கோடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், தற்கொலை செய்து கொண்ட கோடநாடு எஸ்டேட் கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன், தடயவியல் நிபுனர் ராஜ்மோகன் ஆகிய 4 பேர் மட்டும் எதிர்வரும் 12-ம் தேதிக்கு ஆஜராக வேண்டும் என வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.